முதல் நாயகியின் தங்கை நீ
பால்யம் மாறாமல் இருந்தாய்
அன்புள்ள மாமாவுக்கு
மருமகளாக இருந்தாய்
உரிமைகள் வகுத்துக்கொண்டு
நல்ல மகளாக இருந்தாய்
ங்க’வை தொலைத்தப்பின்
தோழியாக இருந்தாய்
ச்சி.. ப! ச்சி.. ப! என்ற போது
என் ஒரே செல்லமாக இருந்தாய்
அந்த மகாலெட்சுமி ஒடிப்போகையில்
நீ மட்டும் மிச்சம் இருந்தாய்
உன்னை காதலிக்க முடியாது
ஆனாலும் என் அத்தனை காதலையும்
நீயே எடுத்துக்கொண்டாய்
உன் புறலட்சணம்
என் மூன்றாவது தங்கையுடையது
உன் அகலட்சணம்
என் அருவ அன்னையுடையது
உன்னை தோளில் தூக்கி சுமந்திருக்கிறேன்
நானும் சிறுவனாகி விளையாடியிருக்கிறேன்
தவறுகளைத் திருத்தியிருக்கிறேன்
குற்றங்களைக் கண்டித்திருக்கிறேன்
உன் ருதுகாலத்தை கையாண்டிருக்கிறேன்
நீச்சல் பழக்கியிருக்கிறேன்
சைக்கிள் பழக்கியிருக்கிறேன்
பயணம் பழக்கியிருக்கிறேன்
புத்தகம் பழக்கியிருக்கிறேன்
நீ கைப்பிடித்து நடக்க வேண்டியதில்லை
உன்னை பறக்காட்டியிருக்கிறேன்
இப்போதும் இச்சையின்றி முத்தமிடுகிறாய்
எப்போது வளர்ந்தாயென அறியேன்
சுயம் கொண்டாய்
தனியே நடக்கிறாய்
அரசியல் பேசுகிறாய்
இலக்கியம் ரசிக்கிறாய்
கவிதை எழுதுகிறாய்
தீர்க்கமாக முடிவெடுக்கிறாய்
குடும்பத்தின் ஒரு தூண் ஆகிவிட்டாய்
உனக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறேன்
இப்போது
சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கிறாய்
மது நெடியைக் கடிந்துகொள்கிறாய்
அக்காவுக்கு துரோகமிளைத்தேன் என்கிறாய்
அன்பை கூட்டித்தரச் சொல்கிறாய்
அலுவலகத்திற்கு விடுப்பெழுத வைக்கிறாய்
எனது பதினெட்டு வருடங்களை அழித்துவிடும்
ஒரு மெகா ரப்பரை இழுத்து வருகிறாய்
மேலும்
இன்றைய உனது ஸ்பரிசத்தில் விரகமேறியிருக்கிறது...
நீ
என்னைக் கட்டிக்கொள்ளும்
ஆசையைத் தெரிவிக்கையில்
ஒரு மனைவியும்
இரு குழந்தைகளும்
என்னை கட்டிவைத்து
அடித்துக்கொண்டிருகிறார்கள்....
- மகேஷ் பொன்