11 மார்ச் 2020

பெஸ்ட்டியாக ஆசிர்வதிக்கப்பட்டவன்


நட்புக்கு கொஞ்சம் மேல்
காதலுக்கு கொஞ்சம் கீழ்
நட்பும் காதலும் அனாதையானால்
நல்லாண்மை இரண்டுமாக ஆகிவிடுகிறது

நான் அவளின் வளர்ப்பு நாய்
யாரை குரைக்க வேண்டும்
யாரை கடிக்க வேண்டும்
யாரிடம் வாலாட்ட வேண்டும்
என பழக்கப்படுத்தி வைத்திருக்கிறாள்

நான் அவளின் உப்பிய மணிபர்ஸ்
கடைசி ஒரு ரூபாயயையும் கரியாக்கி
கடைக் கண்ணில் மைப் பூசிக்கொள்கிறாள்

நான் அவளின் பூப்போட்ட கைக்குட்டை
எப்போதும் கையில் இருக்கும் அதை
அவளது கண்ணீர் துடைக்கவும்
எனது கண்கட்டி விளையாடவும்
ஸ்கூட்டியில் விழுந்த எச்சம் நீக்கவும்
சமயத்தில் ருதுகால திடீர் விஸ்பராகவும்
குட்டிக்குரா டால்கம் தூவி பயன்படுத்துகிறாள்

நான் அவளின் ஹைஹீல்ஸ் செருப்பு
அவளை ஒய்யாரமாய் காட்டினாலும்
தனது வீட்டிற்குள் நுழைகையில்
என்னை ஓரமாய் கழட்டிவிட்டுதான் போகிறாள்

நான் அவளின் அலாவுதீன் அற்புதவிளக்கு
ஒற்றை உரசலுக்கு கிளம்பிய அடிமைப்பூதம்
மலையைப் பெயர்க்கிறது
அலையை நிறுத்துகிறது
மின்கம்பத்தில் ஏறுகிறது
சாக்கடையில் குதிக்கிறது
புலியென மாறி உருமுகிறது
பூனையென மாறி மியாவுகிறது
படுக்கையறையில் உலவுகிறது
பாட்டிலுக்குள் அடைபடுகிறது

நீங்கள் கூறுவது போல்
அவள் என்னை எல்லாவற்றிற்கும்
பயன்படுத்ததான் செய்கிறாள்
இருப்பினும்
நானும் அவளை ஒன்றிற்கு மட்டுமாவது
பயன்படுத்ததான் ஏங்குகிறேன்

மற்றபடி நம்பலாம்
நாங்கள் நல்ல நண்பர்கள்தான்
இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருகிறோம்
கைக்கோர்த்து தூரம் நடந்திருக்கிறோம்
மெசஞ்சரில் இரவுகளைத் தொலைத்திருக்கிறோம்
தோள் சாய்ந்தபடி நீள பயனித்திருக்கிறோம்
கவிதையை ரசிக்கிறோம்
சினிமா பார்க்கிறோம்
அரசியல் பேசுகிறோம்
அரட்டை அடிக்கிறோம்
நான் டாய்லெட் வாயிலில் நின்றிருந்திருக்கிறேன்
அவள் ஒயின்ஷாப் எதிரில் காத்திருந்திருக்கிறாள்
டால்ஸ்டாய், சேக்ஸ்பியர், பாரதி, சுஜாதா,
இன்னும் பெண்ணியக் கவிஞர்களை எல்லாம்
என் வீட்டிற்குள் அழைத்து வந்தவள் அவள்
ழாக்டெரிடா, மார்க்ஸ், அம்பேத்கர், பாரதிநிவேதன்
இன்னும் சமூகப் புரட்சியாளர்களை எல்லாம்
அவளுக்கு அறிமுகம் செய்தவன் நான்
கோனவாய் சுயமிக்கும்
ஃப்ரி ஃபையர் விளையாட்டுக்கும்
இளையராஜா பாடலுக்கும்
எங்களுக்குள் ஒத்த ரசனை இருக்கிறது

அவள் எனது ஒரே நல்லாள்
இது வல்லான்களின் காலம்
எவனையும் நெருங்கவிடக்கூடாது
அவள் காதல் செய்யலாம் ஆனால்
காதலன் பெரும் துரோகமிளைக்க வேண்டும்
அவள் கல்யாணம் முடிக்கலாம் ஆனால்
கணவன் சந்தேகித்து சண்டையிட வேண்டும்
பெஸ்ட்டிகளின் முத்தம்
காமத்தில் சேராது என்பாள்
அவளுடன் தனியறையில் தங்கநேர்ந்த போது
பிடிப்பான மூன்று ஜட்டிகளைப் போட்டிருந்தேன்

ஓருயிர் ஈருடலாய் திரியுமிது
எதிர்பார்ப்புகளின்றி இயங்குமென்பது
நம்பிக்கொல்லும் பொய்தான்
மற்றப்படி நல்லாண்மை காத்திருப்பது
காய் கனிவதற்காகவே
இலவு காத்த கிளியென ஆவதும்
பழந்தின்னி வவ்வாலென ஆவதும்
பொறுமையின் உச்சத்தில் இருக்கிறது
பெஸ்ட்டியாக ஆசிர்வதிக்கப்பட்டவன்
இன்னும் சிலகாலம் காத்திருக்கலாம்


- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை: