நான் கைப்பட வளர்த்த
பூனைக்குட்டி
மீசை முளைத்ததும்
புலியென மாறிவிட்டது
சாந்தமாக எப்போதும்
என்னுடன் வரும் அது
இப்போது வேட்டையாடும்
நோக்கம் கொண்டுள்ளது
நான் அறம்புகட்டி
அவ்வப்போது அடக்கிவைக்கிறேன்
அதற்கு யாரும்
வேட்டை பழக்கவில்லை இருந்தும்
சிவந்த பிணைகளைப்
பார்த்தால் பாயத்துடிக்கிறது
நான் அதை உடனே
அசுவாசப்படுத்தி
கேரள புள்ளிமான்
முதல் காஷ்மீர் கவரிமான்
கனடா முசு, ஆஸ்திரேலிய
கடமா
இன்னும் உள்ளூர்
ஆடுகள் வரை
ஆண்ட்ராய்டில்
பதவிறக்கம் செய்து
அன்றைய இரவுக்கு
திண்ணக் கொடுக்கிறேன்
நான் வெட்டி எறியும்
அதன் உகிர்கள்
சற்று அயர்கையில்
முற்ற வளர்ந்துவிடுகிறது
அது எதிர்வீட்டு
கன்றிட்ட பசுவை
காவல் மீறி பிராண்டி
பார்க்கிறது
மாமி வீட்டு செம்மறியை
காத்துக்கொள்வதாக கூறி
அதன் மார்பில் பல்லுபடாமல் கடித்துவைக்கிறது
ஷாப்பிங் மாலில்
பசுந்தோல் போர்த்தி திரிவது
இந்த புலியாகத்தான்
இருக்கக்கூடும்
கோரமாக வேட்டையாடப்பட்டு
இரத்தக் கோலத்தில் புதரில் மரித்து கிடக்கும்
அந்த இளமான் குறித்த
செய்தியை படித்தவுடன்
இந்த புலியின்மீது
சந்தேகம் எழுகிறது
செந்நாய்கள் கூட்டமாக
வேட்டையாடுகின்றன
கழுதைப் புலிகள்
வேட்டையாடியவற்றை அபகரிக்கின்றன
சீ மாமிசம் எல்லாமே
மாமிசமா
ஒரு புள்ளி மானை
தனித்தே வேட்டையாடுவது
தீரம்தானே என்கிறது
இந்த கடுவா புலி
ஒய் நித்யானந்தரே
இதை இங்கேயே விட்டுச் செல்கிறேன்
இதற்கு சத்சங்க ஆன்மிகம் பழக்கும்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக