எனது அண்ணன் ஒரு
குதிரையை பரிசளித்தான்
ராஜி என்று பெயரிடப்பட்ட
அது
இரட்டைக் கொம்புகளையுடைய
கருப்பு யூனிகார்ன்
எனக்கது கருஞ்சிறுத்தை
என் அக்காவுக்கு
காட்டெருமை
350பாகை ஒளிபொருந்திய
கண்களையுடையது
பூசெபலஸின் பெரிய
ஈரலையுடையது
அதன் ஒற்றை பாதக்குழம்புகள்
சற்றே பெரியது
பஜாஜ் பல்சர் லாயம்
220சிசி கடிவாளம்
டபுல் டிஸ்க் லாடம்
காலத்தை கடக்கும்
வேகம்
தார்ச்சாலைகளும்
தேரடிவீதிகளும் மட்டுமே
அதன் பாதைகளல்ல
காட்டுப்பெருவைகளும்
மலைச்சரிவுகளும்
அதன் பாதைகள்தான்
அதன் பாதைகள்தான்
அது
டிராபிக்கில் புகுந்து முன் செல்கையில்
நான் ஆயிரம் ஆண்டுகள்
பின் சென்று
மாமள்ளன் இராஜராஜனின்
போர்கள வலவனாகிறேன்
சமயத்தில் என்னை
அது உலாவரும் இளவரசனாக்கி
ஏழ்வகை பெண்களையும்
திரும்பிப் பார்க்கவைக்கிறது
எனது விவேகம்
எனது நம்பிக்கை
எனது கம்பீரம்
எனது டைமிங்
எனது காதலும்
அவள் பின்னிருக்கையில்
காற்றில் பறக்கும்
துப்பட்டா இறக்கையென மாறி
மூவரும் ஓர் பறவையென
காற்றில் ஏகுகிறோம்
நெல்லை டூ காரையார்
அறுபது கிலோமீட்டர்
அரை மணி நேரம்
எப்போதும் முந்தியிருக்கச்
செய்யும் அதுதான்
ஸ்கூட்டிகளுக்கு
பின்னால் பிந்தியிருக்கச் செய்கிறது
எந்நேரமும் ஓவர் ஸ்பீடில் சீரும் அதுதான்
சிலநேரம் போலிஸிடம்
பல்லிளிக்கிறது
காவலரே இது சோழ
மாமன்னரின் ரதம்
ஆகட்டும்! மன்னரின்
தலையில் கிரீடம் இல்லையே
இளவரசிக்கு பூ
வாங்கவிருக்கும் நூறு பொற்காசுகளை
பரிசளிப்பதை தவிர
வேறு வழியில்லை…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக