24 ஏப்ரல் 2019

கற்பெனப்படுவது யாதெனில் எக்கிய முத்ததிற்கு ஏங்குதல்

பால்யத்தின் அம்மாஅப்பா விளையாட்டில்
நான் அப்பாவாக இருந்தேன்
சித்தி முறையினள் அம்மாவாக இருந்தாள்
திருடன் போலிஸ் விளையாடிய போது
எப்போதுமே நண்பனின் அக்காவுடன்
மறைவான இடத்தில் ஒளிந்து கொள்வேன்
பதிமூன்று வயதிலேயே
நான் என்காதலை தைரியமாக சொன்னதால்
பன்னிரெண்டு வயதிலேயே
அவள் எல்லோரும் வியக்க பூப்பெய்துவிட்டாள்
என்னை கட்டிக்கொள்ளும் போதெல்லம்
என் தூரத்து அத்தை நிச்சயம் சொல்வாள்
தன் மகளை எனக்கே கட்டித் தருவதாக
பிள்ளையாருக்கும் அரசமரத்துக்கும் இடைபட்ட சந்தில்
நான் முத்தமிட்டவள் உடன்பயின்றவனின் காதலி
மாடு மேய்க்கும் சாக்கில் சந்திக்க வந்தாள் ஒருவள்
தானாக அவிழ்ந்துக் கொண்ட மாடு
இளம் வாழைத்தோப்பை மேய்யென மேய்ந்துவிட்டது
உயிராக காதலித்தேன் ஒருவளை
அவளின் மூத்த அக்காவை மனதுள் காதலித்தேன்
அவளின் இரண்டாவது அக்கா என்னை காதலித்ததால்
அவளை மின்சாரமற்ற ஓரிரவில்
ஒத்தையடி பாதையில் ஆலிங்கனம் செய்தேன்
மேலே உயிராக காதலித்தவளின் தோழியையும்
பின் அத்தோழியின் அக்காவையும் காதலித்தேன்
போதை தலைக்கேறிய ஒரு நாள்
நான் பிறன்மனை ஏறினேன்
அவள் சீனியிடாமல் பால்டீ குடிக்கத்தந்தாள்
மூன்றுவருட ஒருதலைக்காதல் வசமான போது
உறைகொண்டு ஊடல்தணித்து கூடினேன்
என்னை எக்கி எக்கி முத்தமிட்டவளுக்கு
சத்தியம் செய்திருக்கிறேன் மணந்துகொள்வதாக
உடன் பணிபுரியும் தோழியுடனான நீண்ட பயணத்தில்
பேருந்தென்றும் பாராமல் அவளை
ஏழெட்டுமுறை விரல்களாலேயே புணர்ந்துவிட்டேன்
நான் என் இருபத்தெட்டாவது வயதில்
பதினாறு வயதில் ஒருவளை காதலித்தேன்
அவளும் என்னை அப்படிதான் காதலித்தாள்
ஆனாலும் வயதை காரணம் காட்டி
வேரொருவளை மணந்துகொண்டேன்
முன்னால் காதலியுடன் அவள் அறையில்
பீயர் குடித்து அவள் என் தலைகோத
விடியும் இரவில் அப்படியே உறங்கிவிட்டேன்
ஆண்ட்ராய்டில் காதலிப்பது
ஆண்ட்ராய்டில் முத்தமிடுவது
ஆண்ட்ராய்டில் சயனிப்பது
என்பனக் குறித்தெல்லாம் பேசுவதற்கில்லை
எல்லாமே விருப்பத்தின் பேரில் நடந்ததாலும்
நான் குற்றவாளியல்ல என சொல்வற்கில்லை
என்னிடம் எல்லா உரிமகளையும் எடுத்துக்கொள்ளும்
முன்னாள் காதலியே இன்னாள் தோழியே
என்னிடம் மறைப்பதற்கு உன்னிடம் நிறைய இருப்பின்
நமது நட்பில் இப்படிதான் பிசிரு தட்டும்
உன்னை கடிந்துரைக்குமளவுக்கு யான் கற்பினனல்லன்
இன்னும் சொல்லப்போனால் இன்னமும் 
உன் எக்கிய முத்தத்திற்காக ஏங்கவே செய்கிறேன்
நீ என் யோக்கியதையைக் கடிந்துகொள்ளலாம்
நண்பனுக்கு செய்வதுவே நினக்கும்
எனக்கு ஆண் பெண் பேதமில்லை
எனவே நீ உன் ஆறாவது காதல் குறித்து பேசலாம்
என்னாலும் இன்னும் எவனாலும் தரிசிக்கப்பட்டவர்கள்
ஆனாலும் பத்தினிகள்தான் அவளவள் கணவனுக்கு
நானும் அங்ஙனமே பத்தினன்தான் என் மனைவிக்கு
அவ்வளவே அவ்வளவே கற்பெனப்படுவது... 


23 ஏப்ரல் 2019

பசுத்தோல் போர்த்தியப் புலி



நான் கைப்பட வளர்த்த பூனைக்குட்டி
மீசை முளைத்ததும் புலியென மாறிவிட்டது
சாந்தமாக எப்போதும் என்னுடன் வரும் அது
இப்போது வேட்டையாடும் நோக்கம் கொண்டுள்ளது
நான் அறம்புகட்டி அவ்வப்போது அடக்கிவைக்கிறேன்
அதற்கு யாரும் வேட்டை பழக்கவில்லை இருந்தும்
சிவந்த பிணைகளைப் பார்த்தால் பாயத்துடிக்கிறது
நான் அதை உடனே அசுவாசப்படுத்தி
கேரள புள்ளிமான் முதல் காஷ்மீர் கவரிமான்
கனடா முசு, ஆஸ்திரேலிய கடமா
இன்னும் உள்ளூர் ஆடுகள் வரை
ஆண்ட்ராய்டில் பதவிறக்கம் செய்து
அன்றைய இரவுக்கு திண்ணக் கொடுக்கிறேன்
நான் வெட்டி எறியும் அதன் உகிர்கள்
சற்று அயர்கையில் முற்ற வளர்ந்துவிடுகிறது
அது எதிர்வீட்டு கன்றிட்ட பசுவை
காவல் மீறி பிராண்டி பார்க்கிறது
மாமி வீட்டு செம்மறியை காத்துக்கொள்வதாக கூறி
அதன்  மார்பில் பல்லுபடாமல் கடித்துவைக்கிறது
ஷாப்பிங் மாலில் பசுந்தோல் போர்த்தி திரிவது
இந்த புலியாகத்தான் இருக்கக்கூடும்
கோரமாக வேட்டையாடப்பட்டு
இரத்தக் கோலத்தில்  புதரில் மரித்து கிடக்கும்
அந்த இளமான் குறித்த செய்தியை படித்தவுடன்
இந்த புலியின்மீது சந்தேகம் எழுகிறது
செந்நாய்கள் கூட்டமாக வேட்டையாடுகின்றன
கழுதைப் புலிகள் வேட்டையாடியவற்றை அபகரிக்கின்றன
சீ மாமிசம் எல்லாமே மாமிசமா
ஒரு புள்ளி மானை தனித்தே வேட்டையாடுவது
தீரம்தானே என்கிறது இந்த கடுவா புலி
ஒய் நித்யானந்தரே இதை இங்கேயே விட்டுச் செல்கிறேன்
இதற்கு சத்சங்க ஆன்மிகம் பழக்கும்…

மன்னர் வகையறா



எனது அண்ணன் ஒரு குதிரையை பரிசளித்தான்
ராஜி என்று பெயரிடப்பட்ட அது
இரட்டைக் கொம்புகளையுடைய கருப்பு யூனிகார்ன்

எனக்கது கருஞ்சிறுத்தை
என் அக்காவுக்கு காட்டெருமை
350பாகை ஒளிபொருந்திய கண்களையுடையது
பூசெபலஸின் பெரிய ஈரலையுடையது
அதன் ஒற்றை பாதக்குழம்புகள் சற்றே பெரியது

பஜாஜ் பல்சர் லாயம்
220சிசி கடிவாளம்
டபுல் டிஸ்க் லாடம்
காலத்தை கடக்கும் வேகம்
தார்ச்சாலைகளும் தேரடிவீதிகளும் மட்டுமே 
அதன் பாதைகளல்ல
காட்டுப்பெருவைகளும் மலைச்சரிவுகளும் 
அதன் பாதைகள்தான்

அது டிராபிக்கில் புகுந்து முன் செல்கையில்
நான் ஆயிரம் ஆண்டுகள் பின் சென்று
மாமள்ளன் இராஜராஜனின் போர்கள வலவனாகிறேன்
சமயத்தில் என்னை அது உலாவரும் இளவரசனாக்கி
ஏழ்வகை பெண்களையும் திரும்பிப் பார்க்கவைக்கிறது

எனது விவேகம்
எனது நம்பிக்கை
எனது கம்பீரம்
எனது டைமிங்
எனது காதலும்
அவள் பின்னிருக்கையில்
காற்றில் பறக்கும் துப்பட்டா இறக்கையென மாறி
மூவரும் ஓர் பறவையென காற்றில் ஏகுகிறோம்

நெல்லை டூ காரையார்
அறுபது கிலோமீட்டர்
அரை மணி நேரம்
எப்போதும் முந்தியிருக்கச் செய்யும் அதுதான்
ஸ்கூட்டிகளுக்கு பின்னால் பிந்தியிருக்கச் செய்கிறது

எந்நேரமும் ஓவர் ஸ்பீடில் சீரும் அதுதான்
சிலநேரம் போலிஸிடம் பல்லிளிக்கிறது
காவலரே இது சோழ மாமன்னரின் ரதம்
ஆகட்டும்! மன்னரின் தலையில் கிரீடம் இல்லையே
இளவரசிக்கு பூ வாங்கவிருக்கும் நூறு பொற்காசுகளை
பரிசளிப்பதை தவிர வேறு வழியில்லை…

10 ஏப்ரல் 2019

எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்டி., X எம்.டெக்.,



ஆண்டிப்பட்டி டூ அபிஷேகப்பட்டி
அபிஷேகப்பட்டி டூ ஆண்டிப்பட்டி 
ஒரு முறை கோயம்புத்தூர் 
ஒரு முறை கேரளா என
எனது எல்லா பயணங்களிலும்
திரும்பிவருதல் குறித்த அக்கறையிருந்தது

வாட்டர் பாட்டிலில் எடுத்தச் சென்ற 
அப்பாவின் கனிவு பருகியாயிற்று
டிபன் பாக்ஸில் எடுத்துச் சென்ற
அம்மாவின் அன்பு உண்டுச் செரித்தாயிற்று
எனது படுக்கையறையில் உடனிருக்கும் தம்பி
இன்று வராண்டாவில் காற்று வாங்குகிறான்

முதல் வகுப்பு செல்ல மறுதலிக்கையில்
கண்ணீர் துடைத்து மிட்டாய் வாங்கித்தந்த
அதே கரங்கள்தான் இன்று
வலுக்கட்டாயமாக தள்ளுகிறது முதலிரவறைக்குள்
இனி மழையில் நனைந்து வந்தால் 
நானே துவட்டிக்கொள்வேன்
இனி நான் பயப்பட என்னவிருக்கிறது
நீர் பாம்புகள் விஷமற்றவை என்பது உண்மைதானே

இவள் என் தேவதை என்பாய்
ஊர் மெச்சும் அழகு என்பாய்
உன்னால் எனக்கு சுதந்திரம் இருந்தது
இன்றும் என் கைப்பையில் ஆயிரமிருக்கிறது
என் பெயருக்கு பின் அம்பேத்கர் இருக்கிறார்

ஆண்டிப்பட்டி டூ களக்காடு
எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது
ஆனால் திரும்பிவரும் தூரமில்லை
ஏனெனில்
தேவதை நீள்வதை ஆகிவிட்டேன்
என் கண்ணத்தின் வாலிப்புக்கு வயதாகிவிட்டது
என் காலேஜ் பேக்கின் வயிறுமுட்ட சீர்ரிருக்கிறது
இன்னொரு சந்திப்பிற்கு பொதுவெளி இருக்கிறது

அவன் உன் சாயலில் இருப்பானா 
என் நண்பனைப் போல் உடற்கட்டுடையவனா
என் நண்பனைப் போல் சிரிக்கவைப்பானா
என் நண்பனைப் போல் மீந்த உணவை உண்பானா
என் நண்பனைப் போல் ருதுகாலத்தை கையாள்வானா
இளையராஜாவின் எனதினிய பாடல்களை ரசிப்பானா 
தானே எழுதிய ஒரு கவிதையை பரிசளிப்பானா
கடந்துசெல்லும் அஜித்தின் அழகை ஆர்த்திக்க அனுமதிப்பானா 
என் நண்பனைப் போல் என் நண்பனைப் போல்
அறிவில்லாவிட்டாலும் மண்டையில் மயிரிருக்கிறதா

குடும்பத்திற்கு பாரமாக இருந்ததால்தான்
என் நண்பிகள் லவ்விகொண்டு ஓடினார்களா
என்னை இதுநாள் வரை லவ்விய ஒருநூவருக்கு
எனது ஆழ்ந்த வருத்தங்கள்
நான் வாழவேண்டியது உங்களில் ஒருவனுடன்தான்
எவனோ என்னை வன்புணர்வு கொள்ளதான்
ஊர்கூடி விழா எடுக்கிறிர்களா
இதற்காகதான் இந்த செங்கனிகள்
இத்தனை இத்தனை வருடம் 
எந்த அணிலிடமும் கடிபடாமல் கனியாதிருந்ததா

இந்நாள்வரை எல்லாமே என் விருப்பம்தானே
எல்லாவிருப்பும் ஒரேஒரு திணிப்பில் சமன்கொண்டுவிட்டதே
உன் விருப்பத்தின் பேரில் போகிறேன்
வாழ்வேனா வாழ்ந்துதொலைப்பேனா தெரியவில்லை
அனாலும் போகிறேன் திரும்பி வரப்போவதில்லை
ஒரே ஒரு பெருமிதம் என் அப்பா
இனியும் உன் இன்சியலோடுதான் வாழப்போகிறேன்

- (அமித்ராவுக்காக)