முகம்-1
நடைமுறைக்கு பழக்கப்பட்டவன்
அன்றைய பொழுதுகளை வாழ்பவன்
வெகுளிக்கு விளக்கம் தெரியாதவன்
உணவின் சுவை அறியாதவன்
எல்லோரையும் நம்புகிறான்
நாத்திகம் பேசினாலும் பிரசாதம் திண்கிறான்
அன்பை சமமாக்கி வைத்திருக்கிறான்
விடுப்பின்றி பணி செய்கிறான்
கணக்கு பார்க்கிறான்
எதிர்காலம் குறித்து கனவு காண்கிறான்
வறுமையில் வராக்கடனை யோசிக்கிறான்
இரவில் மின்விசிறிக்காக இரக்கப்படுகிறான்
நண்பர்களுகு ரீசார்ஜ் செய்கிறான்
தோழிகளின் ‘ஹி’க்கு நாலாம்நாள் பதிலிடுகிறான்
குடும்ப பாரத்தை விரும்பியே சுமக்கிறான்
எதிர் வீட்டுக்காரனிடம் சின்நகையில் பேசுகிறான்
புதிய நண்பர்களை மொபைலில் சேவ் செய்கிறான்
ஜனநாயகத்தை நொந்துகொள்கிறான்
தங்கை ரிமோட்டிட டிவி பார்க்கிறான்
முன்னால் காதலிகளின் நலன் விரும்புகிறான்
ஒதுங்கிப் போகிறான்
ஒரு கப் தேநீர் அருந்துகிறான்
அவ்வளவே இயல்முகன்…..
இன்றும் உங்களை கடந்து சென்றவனவன்
முகம்-2
அன்பைப் பொழிகிறான்
அக்கா மகள்களை நலம் விசாரிக்கிறான்
முதலாளியாக விரும்புகிறான்
ஆடம்பர செலவு செய்கிறான்
சண்டைகாரன் மகளுக்கு சாக்லெட் தருகிறான்
இலக்கியம் பேசி இரவுகளைத் தொலைக்கிறான்
தோழிகளில் ஒருத்தியை மணக்க விரும்புகிறான்
நண்பர்களோடு நீள பேசிக்கொண்டிருக்கிறான்
நக்சலின் மார்க்ஸிய நியாயங்களை இயம்புகிறான்
அண்ணனுக்கு வாட்ஸ்அப் செய்கிறான்
அநியாயத்துக்கு குரல் கொடுக்கிறான்
நியூஸ் பார்கிறான்
அம்மாவுக்காக பாத்திரம் விளக்குகிறான்
பிச்சை இடுகிறான்
இவன் கால்முகன்….
முகம்-3
எல்லோரையும் வெறுக்கிறான்
இயேசுவை சண்டைக்கு இழுக்கிறான்
பெட்டிக்கடையில் கடன் கேட்கிறான்
கோபப்படுகிறான்
உணவின் சுவை குறித்து கலகம் செய்கிறான்
தன் கொட்டம் அடிக்கிறான்
சிக்னலை மீறுகிறான்
இளையராஜா பாடலில் லயித்துப் போகிறான்
நண்பனின் தங்கைக்கு நூறு எஸ்எம்எஸ் அனுப்புகிறான்
முகேஷை பார்த்துக்கொண்டே புகைக்கிறான்
சமயத்தில் வெட்கபடுகிறான்
இவன் அரைமுகன்….
முகம்-4
உலகை மறந்துவிடுகிறான்
மனைவியை அடிக்கிறான்
எதையேனும் உடைக்கிறான்
வாந்தி எடுக்கிறான்
பஸ் ஸ்டாண்டில் தூங்குகிறான்
தங்கையின் நடத்தையில் சந்தேகம் கொள்கிறான்
கோத்தா, கொம்மா, ஜட்டி, பாடி எனத் திட்டுகிறான்
அப்பாவின் இயலாமையை குத்திக்காண்பிக்கிறான்
அத்தையை மச்சினியை முத்தமிட துடிக்கிறான்
ஆட்டோவில் வருகிறான்
இவன் முக்கால்முகன்….
முகம்-
0
யோகநிலையில் இருக்கிறான்
புத்தனாக விரும்புகிறான்
கனவில் நயன்தாராவை புணருகிறான்
கிடைமட்டம் ஆகிறான்
இவன் முழுமுகன்….