இந்த மழைதான் நிலம் தப்பி
பெய்தது…
இந்த மழைதான் பருவம் தப்பி
பெய்தது…
இந்த மழைக்குதான் ஓடி
ஒளிந்தோம்…
இந்த மழைக்குதான் கூடிக்
களித்தோம்
இந்த மழையால்தான் காய்ச்சல்
வந்தது…
இந்த மழையால்தான் காய்ச்சல்
நின்றது…
இந்த மழைதான் வாழ்வில் வளம்
சேர்த்தது..
இந்த மழையை வெறுத்த சிலர்;
தேவையற்ற நீர்வரவு
என்றார்கள்…
நிறுத்தச் சொல்லி மனு
கொடுத்தார்கள்…
இக்கழுதைகளைப்
பிரித்துவைத்தார்கள்
மழையோ பெய்யோ பெய்யென
பெய்தது…
இந்த மழையை கட்டுக்குள்
கொண்டுவர
ஊர்கூடி, மூன்று
முடிச்சியில் கட்டினார்கள்
ஒரு பேரிடியுடன் மழை
நின்றது…
எல்லோரும் உறங்கும் ஓரிரு
இரவில்
இந்த மழை மீளப்பொழிவதை
உணர்ந்த நாங்கள்
பெய்யென பெய்த மழை
நினைவுடன்
சாரலிலும் தூரலிலும்
நனைகிறோம்…
இது ஊருக்கு எதிரானதுதான் -
இருந்தும்
நிரம்பத் தேங்கிக்கிடக்கும்
இந்த மழைநினைவை
இருவர் மட்டும்தானே
இறைக்கிறோம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக