மனது மீறிவிட்டாலும்
வயது எறிவிட்டதும் உண்மைதான்…
விற்ற பொருளுக்கு
விலைவைப்பவளாய் நீ
வீங்கிய கைகளுக்கு
வளையிடுபவனாய் நான்
அறுவடை காலத்தில் பொழியும்
பே மழையாய் நீ…
சிறுபடை தாக்கத்தில் அழியும்
மா ராஜ்யமாய் நான்…
பார்வைத் திறமும்
வார்த்தை லயமும்
பாலினக் கவர்ச்சியும்
ஒத்த இணையாக்கியது…
அன்பின் வளமையும்
இலக்கிய புலமையும்
சோசியலிச சாரமும்
ஈடற்ற இணையாக்கியது…
இருப்பினும் என் பேரன்பே
விருப்பு வெறுப்பற்ற வெற்று மனதுடன்
இருவரும் பிரிந்தாக வேண்டும்.…
உனக்கு காதலிக்க வயதில்லை
எனக்கு காதலிக்கும் வயதில்லை..
முதலாவதாய் காதலிப்பவள் நீ
நிறைய காதலித்தவன் நான்…
உனது வேகம் மீதமிஞ்சுவதால்
எனது விவேகம் நிலைகுலைகிறது…
வேண்டாமென்றாலும்
வெட்ட வெட்ட வளரும் நகத்தைப் போல்
வேண்டுமென்றே
முட்ட முட்ட வளர்கிறது காதல்…
நீ என்னை காதலிக்க
ஓராயிரம் காரணம் இருக்கலாம்
நான் உன்னை மறுத்துரைக்க
ஒரே காரணம்தான் -
நானும் உன்னை காதலிக்கிறேன்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக