30 மார்ச் 2024

தேடுங்கள் கண்டடைவீர்கள்

அதிக மதிப்பெண்கள் பெற
போட்டித்தேர்வில் வெற்றி பெற
உடல் பலம் பெற
உள்ளம் சுகம் பெற
தீய ஆத்துமாவிடமிருந்து விடுபட
காச்சல் தலைவலி தீராநோய் நீங்க
விரைவான தொழில் வளர்ச்சிக்கு
வழுக்கையில் முடி வளர்ச்சிக்கு
என எல்லாவற்றுக்கும்
முதலில்
கர்த்தர்தான் அருளிக்கொண்டிருந்தார்
இப்போது யூடியூப்பர்கள்...
 
     - மகேஷ் பொன் 


 

நேற்று காலை 8 மணியளவில் செத்துவிட்டேன்

என் எதிரிகள்
என்னை கொல்வதற்காக
வைத்திருக்கும் ஆயுதங்கள்
முனை மழுங்கியவை
அவர்கள்
வீச்சருவாள் சரியாக வெட்டாது
பிச்சுவாகத்தி சரியாக குத்தாது
அதனால்தான்
பிழைத்துக்கிடக்கிறேன்….
ஆனால்
எனக்கு பிரியமானவர்கள்
என்னை கொல்வதற்காக
வைத்திருக்கும் ஆயுதங்கள்
மிகமிகக் கூர்மையானவை
அபபடியொரு
கூர்மையானச் சொல்லை எடுத்துதான்
நேற்று நீ
என்னை சதக் சதக் என குத்தினாய்….
 
          - மகேஷ் பொன்