31 மார்ச் 2023

ஆண்ட பரம்பரையினர் பேண்ட பரம்பரையினர் ஆன கதை

கையெடுத்து கும்பிடுவதற்கு
ஒரு கூட்டம் இருந்தது
அடிமை சேவகம் செய்வதற்கு
ஒரு கூட்டம் இருந்தது
குட்ட குட்ட குனிவதற்கு
ஒரு கூட்டம் இருந்தது
பயந்து நடுங்குவதற்கென்றே
ஒரு கூட்டம் இருந்தது
அந்த கூட்டம் இருந்தவரை
ஆண்ட பரம்பரையினர் உயிர்ப்புடன் இருந்தனர்…
 
கூனிக்குறுகி நின்ற அந்த கூட்டம்
காலப் போக்கில் கலைந்து போய்விட்டது.
பெரியார் பின் போனதும்
அம்பேத்கர் பின் போனதும்
அந்த கூட்டம்தான்.
இப்போதும்
அடக்குமுறைக்கு எதிராக
கையை முறுக்குபவர்கள் அவர்கள்தான்
மறுக்கப்பட்ட இடங்களில்
விடாப்பிடியாய் நுழைபவர்கள் அவர்கள்தான்…
 
மீதி பேர்
கூட்டம் கூட்டமாய்
கல்விக்கூடங்களுக்கு போய்விட்டனர்…
இன்னும் கொஞ்சம் பேர்
”சொல்லுக்குச் சொல் பல்லுக்குப் பல்”
என்று உரக்க கத்துபவனின்
அரசியல் கூட்டத்திற்கு போய்விட்டனர்….
 
இப்போதெல்லாம்
அந்த கூட்டம்
ஆதிக்கத் திமிரை
எதிர்த்து அடித்துவிடுகிறது
ஆக
ஊருக்குள் ஆள்வதற்கு
இளைத்தவர்களே இல்லையென்றான பின்
கோரமாய் அடித்து அடக்கவோ
நிர்வானப்படுத்தி ஓடவிடவோ
முகத்தில் மூத்திரம் பெய்யவோ
வாயில் மலத்தை தினிக்கவோ
முடியாமல் போனதன் மாற்றீடுதான்
நீருக்குள் பேள்வதற்கு
வீரசூரர்களை அனுப்பிவைத்துவிட்டு
மீசையை நீவிக்கொண்டிருக்கிறார்கள்
ஆண்ட பரம்பரையினர்…
 
போன வீரசூரர்கள் வேறு
காரியமே கண்ணாய்
நீர் தொட்டிக்குள் பேண்டும் வைத்துவிட்டார்கள்
இனி
பேண்ட பரம்பரையினர் நாங்கள்!
பேண்ட பரம்பரையினர் நாங்கள்!!
என பெருமிதம் பொங்க பீத்திக்கொள்வார்கள்தானே...
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: