14 மே 2020

இப்போது நான் வெளியேற வேண்டும்

பாலுக்காக அழும்
குழந்தையின் பசிதான்
மிகக் கொடிய நோய்

ஊழிகாலத்தில்
ஊர் தொலைவிலிருப்பதுதான்
மிக வலிய ரணம்

வறுமையின் பிடியில்
இருத்தும் தனிமைதான்
மிகப் பெரிய சமூகவிலக்கல்

எங்கள் வீட்டிலிருப்பது
அட்சயப்பாத்திரம் அல்ல
வெறும் ஈயப்பாத்திரம்தான்
அது நேற்றிலிருந்து
ஈஈயென இளிக்கிறது
இப்போது நான் வெளியேற வேண்டும்

கார்பன்மோனாக்சைடை சுவாசிக்க முடிகிறது
ரசாயனத்தை குடிக்க முடிகிறது
பிளாஸ்டிக்கை திண்க முடிகிறது
கார்ப்ரேட் தொற்றை சமாளிக்க முடிகிறது
ஒரு வைரசுடன் வாழ முடியாதா
இப்போதே நான் வெளியேற வேண்டும்


- மகேஷ் பொன்




13 மே 2020

பூச்சாண்டி


தும்பிக்கையில் பழம் திணிப்பவர்கள்
பலசாலிகள் இல்லை
புத்திசாலிகளும் இல்லை
கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தாலும்
யானை ஒரு கொலை மிருகம்
ஓடிவிடும் இடைவெளியில் கடந்துவிடு

பூச்சாண்டி எப்படி இருப்பான்
யானை மாதிரியா
இல்லவே இல்லை
மனிதன் மாதிரியே இருப்பான்

காரி துப்புகிற
கரைவேட்டி தாத்தா
ஒரு பூச்சாண்டி…

லொக்குனு இருமிகிற
எதிர்வீட்டு சித்தி
ஒரு பூச்சாண்டி…

மார்க்கெட் போய்வரும்
நம்ம மாமா
ஒரு பூச்சாண்டி…

டீ போட்டுத்தரும்
அன்பான அக்கா
ஒரு பூச்சாண்டி…

அலுவலக இணையர் ஒரு பூச்சாண்டி…
டியுசன் டீச்சர் ஒரு பூச்சாண்டி…
நண்பன் ஒரு பூச்சாண்டி…
மானசிகி ஒரு பூச்சாண்டி….
அப்பா ஒரு பூச்சாண்டி….
பொண்டாட்டி ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டி குறித்த புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு
பீதி கிளப்பும் செய்தி வாசிப்பாளன்
ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளின் வருகையை ட்ரோன் கேமிராவில்
கண்காணிக்கும் போலிஸ்காரன்
ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டியால் பாதிக்கப்பட்ட நர்ஸ்க்கு
சிகிச்சையளிக்கும் மருத்துவன்
ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளை கிருமிநாசினி பீச்சி விரட்டும்
தூய்மைப் பணியாளன்
ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளிடமிருந்து தப்பிக்க
வீட்டிலேயே இருக்கச் சொல்லும்
முதலமைச்சர் ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளுக்கு எதிராக
கைத் தட்டி, விளக்கு பிடிக்கச் சொல்லும்
பிரதமர் ஒரு பூச்சாண்டி….

பூச்சாண்டிகளுக்கு பயப்படுபவரா நீங்கள்
பூச்சாண்டிகளுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்
நீங்களே ஒரு பூச்சாண்டியாக உருமாறி
பிறரை பயமுறுத்தும் காலம்
வெகு தொலைவில் இல்லை
அப்போது நீங்கள்
இன்னும் பல பூச்சாண்டிகளை உருவாக்கலாம்


- மகேஷ் பொன்

கம்பளிபூச்சி ஊறும் காலம்


எந்த இடம்
அங்கேதான் மேலே வலமாக
எவ்வளவு அழுத்தம்
பிராண்டாதே மெதுவாக
எத்தனை நேரம்
இன்னும் கொஞ்சம் சொரியலாம்
யார் வந்து சொரிந்தாலும்
நான் சொரிந்தது போலாகுமோ
நீ காதலோடுதான் சொரிகிறாய்
எனக்கு சொரியெடுக்கவில்லையே 
 
- மகேஷ் பொன்