நான்
கோட்டை கொத்தளங்களோடு
வாழும் இளவரசி
மதம்
மதில் சுவர்
சாதி
மின்சார வேலி
உறவுகள்
காவல் நாய்
குடும்பம்
பாதுகாப்பு படை
பெண்மை
பேர் அகழி
கற்பு
அதில் அலையும் முதலை
என் அறிவு
என்கையில் இருக்கும் கூர்வாள்
ஆதலால் எனக்கு
இத்தனை அரண்களைக் கடந்து
வெளியே வந்து
ஒர் ஆணைக் காதல் செய்வது
அல்லது காமம் செய்வதன்
சூட்சமம் ஏதும் புரியவில்லை
என் வயது ஆண்களுக்கு
கோட்டையின் உள்ளே புகுந்து
என்னை அடைவதற்கான
போர்தந்திரம் ஏதும் தெரியவில்லை
ஆனால்
என் தோழி ஒருவள்
முதலில்
என் மனதுக்குள் வந்தாள்
பிறகு
அத்தனை அரண்களையும்
உடைத்துக்கொண்டு
என் படுக்கையறைக்குள் வந்தாள்
என்னை காதலித்தாள்
என் உதட்டில் முத்தமிட்டாள்
என் உள்ளாடைக்குள்
கையைவிட்டாள்
பதிலுக்கு
நானும் கையைவிட்டேன்
அப்போது
எங்கள் வானில்
பன்னிரெண்டு வண்ண
வானவில் தோன்றிற்று
இனிமேல்
என்னை காதலிப்பவர்கள்
கடந்து வரவேண்டிய
கூடுதல் ஓர் அரண்
என் வல்லிய ஜெயமாலா
- செ.நிவிதா