தாகத்தோடு போகும்
மானுக்கு தெரியாது
பெரும்பாம்பின் இருப்பு
ஆனால்
பசியோடு இருக்கும்
பெரும்பாம்புக்குத் தெரியும்
மானின் வரவு
இந்த நீர்த்துறை
20 சதவீதம் தாகம் தீர்க்கவும்
80 சதவீதம் பசி தீர்க்கவும்
வாய்ப்புகள் உடையது
வாழ்தல் அதனதன் வெளி
அதுவேதான் உனக்கும்
இந்நீர்த்துறை வாழ்வில்
நீர் வற்றாமல் இருக்கவேண்டும்
பெரும்பாம்பு இல்லாமல் இருக்க வேண்டும்
உன் உயிர் தோழி
பிரிவாற்றாமல் அல்லலுறுகிறாள்
என்பதைத் தவிர
என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை
என் அன்பு மகளுக்கு
நான் ஒருபோதும் வில்லன் இல்லை
”குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல்”
கண்டு வரும்
முதல் நற்றந்தை நானாக இருப்பேன்
